×

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனருக்கு காங். கடிதம்: இந்திய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: பேஸ்புக் விவகாரம் இந்திய அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேஸ்புக் நிறுவனருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான விதிமுறைகளை இந்தியாவில் ஆளும் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகள் மீது பயன்படுத்துவதில்லை என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் கட்டுரை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திடம் நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டுமென காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இக்குற்றச்சாட்டை பேஸ்புக் மறுத்தது. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக தங்களின் நிறுவனம் செயல்படவில்லை என உறுதி அளித்தது. ஆனாலும், பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், இந்திய ஜனநாயகத்தில் தலையிடுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால் அனுப்பி உள்ள அக்கடிதத்தில், “ பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைமை குழு நிர்வாகிகள் மீது உயர்மட்ட விசாரணையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் மற்றும் ஜனநாயக நடைமுறையில் தலையிடுவதை தடுக்க வேண்டும். அவர்கள் மீதான விசாரணையை ஓரிரு மாதங்களுக்கும் முடித்து பேஸ்புக் வாரியத்திடம் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும். துறை ரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதால் பேஸ்புக் இந்தியா நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய குழுவை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

* அங்கி தாஸ் மீது வழக்குப்பதிவு
பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குனர் அங்கி தாஸ், பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவரை நீக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் கட்டுரை வெளியான நிலையில் அங்கி தாஸ், டெல்லி போலீசின் சைபர் பிரிவில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதில், சமூக வலைதளங்கள் மூலமாக கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தனக்கு எதிராக ஆபாச கருத்துக்களை பதிவிடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, சட்டீஸ்கரை சேர்ந்த டிவி சேனல் பத்திரிகையாளர் ஒருவர் அம்மாநில போலீசில் அங்கி தாஸ் உட்பட 3 பேர் மீது புகார் அளித்துள்ளார். அதில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் அங்கி தாஸ் தனது பேஸ்புக் பதிவில் பதில் அளித்துள்ளதாகவும், தனக்கு வாட்ஸ்அப் மூலமாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறி உள்ளார். இதுதொடர்பாக ராய்ப்பூர் போலீசார் அங்கிதாஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* அனைவரும் கேள்வி கேளுங்கள்
இந்த கடிதத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டு, ‘‘நாம் கஷ்டப்பட்டு பெற்ற ஜனநாயகத்தை ஒருதலைப்பட்சமான, போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் மூலம் கையாளுதலை அனுமதிக்க முடியாது. போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு குறித்த புகார்களை தீர்ப்பதில் பேஸ்புக்கின் ஈடுபாடு குறித்து அனைத்து இந்தியர்களும் கேள்வி கேட்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Tags : founder ,executives ,Indian , Hate speech affair, Cong to Facebook founder. Letter, Indian Executives, Action
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும்...